Announcement: Pray for 🇹🇷Turkey 🔹 Follow us in social media and get daily verse 🔹 We are officially now in sharechat. Get your daily bread by follow us. 🔹 இன்றைய சிந்தனை வெளியிடப்பட்டுள்ளது

Sunday, November 27, 2022

கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது?

 பாவத்தை மேற்கொள்ளுகிற நமது முயற்சியில் நமக்கு உதவிட வேதாகமம் பல உதவிகளை அளிக்கிறது. இந்த வாழ்வில் நாம் பாவத்தை பரிபூரணமாக வெற்றி கொள்ள முடியாது (1 யோவான் 1:8). ஆனால் பாவத்தை மேற்கொள்வதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும். தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையின் படியே நடப்பதன் மூலமும், நாம் படிப்படியாக பாவத்தை மேற்கொண்டு மென்மேலும் கிறிஸ்துவைப் போல மாறமுடியும்.













நாம் பாவத்தை மேற்கொள்ளுகிற முயற்சியில் வேதாகமம் அளிக்கும் முதலாவது உதவி பரிசுத்த ஆவியானவர். நாம் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்காகவே தேவன் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அளித்திருக்கிறார். தேவன் மாம்சத்தின் செயல்களையும், ஆவியின் கனிகளையும் முரண்பட்டதாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றார் (கலாத்தியர் 5:16-25). அந்த வேத பகுதியில் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அனைத்து விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவரை உடையவர்கள் மற்றும் அவராலே ஆட்கொள்ளப்பட்டவர்கள் ஆகும். ஆனாலும் இந்த வேதபகுதி நாம் ஆவியானவருக்குக் கீழ்படிந்து ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டுமென்று போதிக்கின்றது. நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் மாம்சத்தின்படி நடவாமல், பரிசுத்த ஆவியானவருடைய உணர்த்துதலுக்குக் கீழ்படிவதைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்பதே இதன் அர்த்தம். 



பரிசுத்த ஆவியானவர் தரக்கூடிய மாற்றத்தை பேதுருவின் வாழ்வில் நாம் தெளிவாகக் காணலாம். அவன் ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு முன்பாக, கிறிஸ்துவை மரண பரியந்தம் பின்பற்றுவேன் என்று கூறிய பின்னும், மூன்றுமுறை மறுதலித்தான். பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்பட்ட பின்பு, பெந்தகோஸ்தே நாளில் வெளியரங்கமாகவும், தைரியமாகவும் யூதர்களிடத்தில் பேசினான். 

நாம் ஆவிக்கேற்றபடி நடக்கிற வேளையில், ஆவியானவருடைய உணர்த்துதலை அவித்துப்போடாமல் இருந்திட முயற்சிப்பதோடு (1 தெசலோனிக்கியர் 5:19ல் கூறியது போல்), ஆவியானவரால் நிரப்பப்படவும் வேண்டும் (எபேசியர் 5:18-21). ஒருவர் பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்படுவது எப்படி? முதலாவது, பழைய ஏற்பாட்டைப் போலவே இது தேவனால் தேர்ந்தெடுக்கப்படுகிற செயலாகும். அவர் எண்ணின காரியத்தை முடித்திட (அவர் தனிப்பட்ட நபர்களை தெரிந்தெடுத்து) அவர்களை தன்னுடைய ஆவியானவரால் நிரப்பினார் (ஆதியாகமம் 41:38; யாத்திராகமம் 31:3; எண்ணாகமம் 24:2; 1 சாமுவேல் 10:18). யாரெல்லாம் தேவவார்த்தையினால் தங்களை நிரப்புகின்றார்களோ அவர்களை நிரப்பிட தேவன் தெரிந்தெடுக்கிறார் என்பதை எபேசியர் 5:18-21, கொலோசெயர் 3:16 இருந்து அறிய முடியும். இது நம்மை இரண்டாவது ஆதாரத்திற்கு நேராக வழி நடத்துகின்றது. 

Click this video for a short 1 minute over view


நம்மை எந்த நற்கிரியைகளையும் செய்ய ஏதுவாக்க தேவன் அவருடைய வார்த்தையை நமக்கு அளித்திருக்கின்றார் என்று வேதாகமம் கூறுகின்றது (2 தீமோத்தேயு 3:16-17). நாம் எப்படி வாழவேண்டும் என்றும் எதை நம்ப வேண்டும் என்றும் போதிக்கின்றது, நாம் தவறான வழியைத் தெரிந்தெடுக்கும் போது அதை நமக்கு வெளிப்படுத்தி, சரியான வழிக்கு நாம் திரும்பிட உதவிசெய்து, அந்த வழியில் நிலைத்திருக்க உதவுகின்றது. எபிரெயர் 4:12ல், தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ளதும், வல்லமையானதும், நம் இருதயங்களை ஊடுருவி, நம் இருதயம் மற்றும் சிந்தையின் ஆழமான பாவங்களை வேரறுத்து, மேற்கொள்ளக் கூடியது என்றும் வாசிக்கிறோம். சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் தேவவார்த்தையின் வாழ்வை மாற்றும் வல்லமையைக் குறித்து அலசி ஆழமாக ஆராய்கின்றார். யோசுவா இந்த தேவவார்த்தையை மறவாமல், அதை இரவும், பகலும் தியானித்து அதற்குக் கீழ்படிந்து நடப்பதே எதிரிகளை மேற்கொண்டு வெற்றி காண்பதற்கான திறவுகோல் என்று யோசுவாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போர் யுக்திகளின் அடிப்படையில் இது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், அவன் அதைச் செய்தான், அதுவே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைவதற்கான போர்களில் வெற்றியடையத் திறவுகோலாய் அமைந்தது. 

இந்த வேதாகமத்தின் ஆதாரத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். வேதத்தை சபைக்கு சுமந்து செல்வது அல்லது ஒரு அனுதின தியானத்தை வாசிப்பது அல்லது தினமும் ஒரு அதிகாரத்தை வாசிப்பது என்று பெயரளவில் செய்கின்றோம், ஆனால் அதை மனப்பாடம் செய்ய, தியானிக்க அல்லது அதை நம்முடைய வாழ்வில் அப்பியாசப் படுத்தத் தவறி விடுகின்றோம்; வேதம் வெளிப்படுத்துகின்ற பாவங்களை அறிக்கையிடவும் அது வெளிப்படுத்துகின்ற நன்மைகளுக்காக தேவனைத் துதிக்கவும் தவறி விடுகின்றோம். 

இதுவரையில் நீங்கள் தினமும் வேதத்தைப் படித்து, மனப்பாடம் செய்வதை பழக்கமாகக் கொள்ளாமலிருந்தால், இன்றே அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டியது முக்கியம். நாட்குறிப்பேட்டை ஆரம்பிப்பதை சிலர் பயனுள்ளதாகக் காண்கின்றனர். வேதத்திலிருந்து கற்றுக்கொண்ட ஏதாவது ஒரு காரியத்தை எழுதும் வரையில் விடப்போவதில்லை என்பதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். சிலர் தேவன் அவர்களோடு மாறவேண்டிய காரியங்களை குறித்து பேசின காரியத்தில் அவரிடம் உதவி கேட்கும் ஜெபங்களைப் பதிவு செய்கின்றனர். ஆவியானவர் நம்முடைய வாழ்வில் பயன்படுத்தும் ஒரு கருவி வேதாகமம் (எபேசியர் 6:17), ஆவிக்குரிய போராட்டத்தில் போராடிட தேவன் தரும் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான போர்க்கருவியாகும் (எபேசியர் 6:12-18). 

பாவத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் மூன்றாவது மிக முக்கியமான காரியம் ஜெபம். கிறிஸ்தவர்கள் உதட்டளவில் செயல்படுத்தி விட்டு, மிகவும் குறைவாகப் பயன்படுத்தும் ஆற்றல் இந்த ஜெபம். நாம் ஜெபக்கூடுகைகள், ஜெப நேரங்கள் போன்ற பல வைத்திருக்கின்றோம், ஆனாலும் ஆதித்திருச்சபையைப் போல் நாம் ஜெபத்தைப் பயன்படுத்துவது கிடையாது (அப்போஸ்தலர் 3:1; 4:31; 6:4; 13:1-3). பவுல் அவர் ஊழியம் செய்தவர்களுக்காக எப்படி ஜெபித்தார் என்பதை மீண்டும் மீண்டுமாகக் குறிப்பிடுகின்றார். ஜெபத்தைக் குறித்து அற்புதமான வாக்குத்தத்தங்களை தேவன் நமக்கு அளித்திருக்கின்றார் (மத்தேயு 7:7-11; லூக்கா 18:1-18; யோவான் 6:23-27; 1 யோவான் 5:14-15), மற்றும் பவுல் ஆவிக்குரிய போராட்டத்திற்கான ஆயத்தத்தைக் குறித்த பகுதியில் ஜெபத்தையும் சேர்க்கின்றார் (எபேசியர் 6:18). 

நம்முடைய வாழ்வில் பாவத்தை மேற்கொள்ள ஜெபம் எவ்வளவு முக்கியமானது? கெத்சமனே தோட்டத்தில், பேதுரு மறுதலிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் அறிவோம். இயேசு ஜெபிக்கும்போது, பேதுரு உறங்குகின்றார். இயேசு அவனை எழுப்பி, “ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது,” என்றார் (மத்தேயு 26:41). பேதுருவைப் போல நாமும் சரியானதைச் செய்யவிரும்பினாலும், நமக்கு அதை செய்வதற்கு பலமில்லை. தேவனுடைய கண்டித்தலைப் பின்பற்றி, நாம் தொடர்ந்து தேடவும், தொடர்ந்து தட்டவும், தொடர்ந்து கேட்கவும் வேண்டும். அப்போது தேவன் நமக்குத் தேவையான பலனைத் தந்தருளுவார் .ஜெபம் என்பது மந்திர சூத்திரமில்லை. ஜெபம் என்பது நம்முடைய குறைவையும், தேவனுடைய அளவில்லாத வல்லமையையும் அறிக்கையிட்டு, நாம் நினைத்ததையல்ல, நாம் என்ன செய்யவேண்டுமென்று தேவன் நினைக்கின்றாரோ அதைச் செய்திட, அவரைச் சார்ந்திடுவதாகும் (1 யோவான் 5:14-15). 

பாவத்தை மேற்கொள்ளுகின்ற நமது போராட்டத்தில் நான்காவது உதவி திருச்சபை, மற்ற விசுவாசிகளோடுள்ள ஐக்கியம். இயேசு தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது, இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் (மத்தேயு 10:1). அப்போஸ்தலர் நடபடிகளில் மிஷனரிகள் தனித்தனியாக செல்லவில்லை, மாறாக இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் கொண்ட குழுக்களாக சென்றனர். சபைகூடிவருதலை விட்டுவிடாமல், அத்தருணத்தில் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவேண்டுமென்று இயேசு கட்டளையிடுகின்றார் (எபிரெயர் 10:24). நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டுமென்று அவர் கூறுகின்றார் (யாக்கோபு 5:16). பழைய ஏற்பாட்டிலுள்ள ஞான இலக்கியத்தில், இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல், ஒரு மனிதன் மற்றொருவனைக் கூர்மையாக்கக்கூடும் (நீதிமொழிகள் 27:17) என்று நமக்குக் கூறப்பட்டிருக்கின்றது. கூட்டணியில் பலமுண்டு (பிரசங்கி 4:11-12). 

அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் கணக்கு ஒப்புவிக்கின்ற ஒருவரைத் துணையாகக் கொண்டிருப்பது, கடினமான பாவங்களை மேற்கொள்ளுவதில் மிகப் பெரிய பயனாகக் கண்டுள்ளனர். உங்களோடு பேசக்கூடிய, ஜெபிக்கக்கூடிய, உற்சாகம் தரக்கூடிய, மேலும் கண்டிக்கக்கூடிய ஒருவர் உங்களுக்கு இருப்பது மிகவும் பயனுள்ளது. சோதனை நம்மெல்லாருக்கும் பொதுவானது (1 கொரிந்தியர் 10:13). நாம் கணக்கு ஒப்புவிக்கின்ற ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோத் துணையாகக் கொண்டிருப்பது, கடினமான பாவங்களையும் கூட மேற்கொள்ள நமக்குத் தேவையான இறுதிகட்ட ஊக்குவிப்பையும், உற்சாகத்தையும் நமக்குத் தரக்கூடும். 

ஒரு சில சமயங்களில் பாவத்தின் மீதுள்ள வெற்றி நமக்கு உடனடியாகக் கிடைக்கின்றது. மற்ற சமயங்களில் பாவத்தின் மீதுள்ள வெற்றி சற்று தாமதமாகக் கிடைக்கின்றது. தேவனுடைய உதவிகளை நாம் பயன்படுத்தும் போது, நம்முடைய வாழ்வில் தொடர்ச்சியாக மாற்றத்தைக் கொண்டுவருவதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். தேவன் தம்முடைய வாக்குத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதை நாம் அறிந்திருக்கிறபடியால் பாவத்தை மேற்கொள்ளுகிற நம்முடைய முயற்சிகளில் விடா முயற்சியுடன் செயல்படமுடியும். 


No comments:

Post a Comment